Published : 27 Oct 2021 03:10 AM
Last Updated : 27 Oct 2021 03:10 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்தும் தண்ணீர் வரக்கூடிய கால்வாய்கள் தூர் வாரப்படாததால் குளம், ஏரிகள் நிரம்பவில்லை என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாமதமின்றி கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மின்தடையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வரத்து வாரிகள், கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளதால், மாவட்டத்தில் அதிக அளவு மழை பொழிவு இருந்தும்கூட குளம், கண்மாய்கள் நிரம்பவில்லை. எனவே, வாரி, கால்வாய்களை தூர்வார வேண்டும்.
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பொன்னுசாமி:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைக்கு தலா ரூ.40 முதல் ரூ.60 வரை கமிஷன் பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
ரெகுநாதபுரம், புதுவிடுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களைக் கொண்டு கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
காவிரி-குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் மிசா.மாரிமுத்து:
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக ஆட்சியரை தலைவராகக் கொண்டு மாவட்ட அளவில் பொறியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய கூட்டத்தை கூட்டி, இத்திட்டத்தின் தற்போதைய நிலவரத்தை தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், எத்தனை குளம், கண்மாய்கள் நிரம்பியுள்ளன, நிரம்பவேண்டியுள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்படுவதில்லை. அதிகளவு மழை பொழிவு இருந்தாலும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் குளம், கண்மாய் நிரம்பவில்லை. எனவே, சிறப்பு திட்டம் மூலம் கால்வாய்களை தூர்வார வேண்டும். இவ்வாறு பேசினர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் கவிரா ராமு பேசியது:
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பான கூட்டம் கூட்டப்படும். வரத்து வாரி, கால்வாய்களை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தேவையான அளவுக்கு உரங்களும், வேளாண் விரிவாக்க மையங்களில் விதைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT