Published : 27 Oct 2021 03:11 AM
Last Updated : 27 Oct 2021 03:11 AM

கோயில் நகைகளை உருக்கும் முடிவை கண்டித்து - இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழக அரசுக்கு எதிராக முழக்கம்

கோயில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, தி.மலையில் நேற்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்த படம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை/வேலூர்/ திருப்பத்தூர்

இந்து கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க நகைகளை உருக்க முடிவெடுத்துள்ள தமிழக அரசைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில், தி.மலை அண்ணாமலையார் கோயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இந்து கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை உருக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கோயில் நகைகளை உருக்கி, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தமிழக அரசின் கஜானாவை நிரப்ப உள்ளனர். கோயில் நகைகள் அனைத்தும், கோயிலுக்கு சொந்தம். அதனை உருக்கக்கூடாது.

இந்து கோயில்களை நிர்வாகம் செய்து வரும் இந்து அறநிலையத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. தி.மலை அண்ணாமலையார் கோயிலில் தானமாக வழங்கிய பசுக்கள், பராமரிப்பு மற்றும் சரியான உணவு இல்லாததால் அடுத் தடுத்து உயிரிழந்து வருகின்றன.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை. அண்ணாமலையார் கோயிலின் பஞ்சரதங்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர் சக்கரத்தில் இருந்த அச்சாணிகள் திருடப்பட்டுள்ளன. அச்சாணிகளை பாதுகாக்க முடியாதவர்கள், கோயிலை எப்படி பாதுகாப்பார்கள்” என்றார். பின்னர், தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

இதில், பாஜக கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் கவுதம், சிவா, நகரச் செயலாளர் செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் காண்டீபன், விஜயராஜ், சரவணன், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டார். முடிவில், தி.மலை ஒன்றியச் செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

வேலூர்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழங்கிய நகைகளை உருக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

அதன்படி, வேலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில், பங்கேற்றவர்கள் கோயில் நகை கள் உருக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாவட்டச் செய லாளர் பிரபு தலைமை வகித்தார். கோட்டச் செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சோமேஸ்வர் வரவேற்றார்.

இதில், கோயில் நகைகளை உருக்க தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்? நகைகளை உருக்கும் முயற்சியில் பல்வேறு ஊழல் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

கோயிலுக்கு சொந்தமான இடம், சொத்து ஆக்கிரமிக் கப்பட்டுள்ள நிலையில், அதை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு கோயில் நகைகளை உருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டித்தக்கது எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x