Published : 26 Oct 2021 03:08 AM
Last Updated : 26 Oct 2021 03:08 AM
தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விளாத்திகுளம் அருகேயுள்ள கமலாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நேற்றுநடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
விளாத்திகுளம் வட்டம் கமலாபுரம் கிராம மக்கள், ஊராட்சித் தலைவர் பி.முருகேஸ்வரி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: கமலாபுரம் கிராமத்தில் தென்வடல் தெரு சாலை 18 அடி அகலம் கொண்டது. இந்த சாலையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், பாதை சுருங்கியுள்ளது. 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமமாக உள்ளது.எனவே, ஆக்கிரமிப்பை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கோபுரம்
தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் ச.மு.காந்தி மள்ளர் கொடுத்த மனுவில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அய்யனார்புரம், வெள்ளப்பட்டி, கிராமங்களுக்கு சொந்தமான அரசு நிலம் சுமார்1,000 ஏக்கர் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 13.11.2021 அன்று ஏர் உழும் போராட்டம் நடத்துவோம் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி 30-வது வட்ட அமமுக செயலாளர் ஆர்.காசிலிங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி டூவிபுரம் 10-வது தெரு பகுதியில் சாலை வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக டூவிபுரம் 10-வது தெருவில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT