Published : 26 Oct 2021 03:08 AM
Last Updated : 26 Oct 2021 03:08 AM

தி.மலை ஆட்சியர் அலுவலகம் முன்பு - பெற்றோரை இழந்த 3 பிள்ளைகள் தர்ணா : வீடு, நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய காவல் துறையினர். படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை

வீடு மற்றும் நிலத்தை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி பெற்றோரை

இழந்த 3 பிள்ளைகளும் பாட்டி

களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் வசித்தவர் மூர்த்தி. இவரது விவசாய நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து, அவரது மாமனார் ஏழுமலை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, விவசாய நிலத்தின் பத்திரத்தை தந்தை ஏழுமலையிடம் இருந்து பெற்றுத் தர மனைவி கலைச்செல்வியை வலியுறுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த 8-ம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்து, சுத்தியலை கொண்டு மனைவி கலைச்செல்வியின் தலையில் மூர்த்தி தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் அவர், தனது விவசாய நிலத்துக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேறுமாறு கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகக் கூறி, மூர்த்தியின் மகள்கள் யோகேஸ்வரி(16), ஹேமமாலினி(9) மகன் கவுரிசங்கர்(7) ஆகியோர் தங்களது பாட்டிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

யாரிடமும் கடன் வாங்கவில்லை

இதுகுறித்து யோகேஸ்வரி கூறும்போது, “தந்தையின் நிலம் மற்றும் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து எனது தாத்தா ஏழுமலை ரூ.4.50 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அசல் தொகைக்கும் கூடுதலாக வட்டி செலுத்தியுள்ளனர். அதேநேரத்தில், கடன் கொடுத்தவர்கள், எங்களது வீடு மற்றும் நிலத்தை கிரையம் செய்துள்ளாக கூறுகின்றனர். எனது தந்தையை ஏமாற்றி கிரையம் செய்துள்ளனர். என் தந்தை யாரிடமும் கடன் வாங்கவில்லை. இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறுமாறு, எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இப்போது, எங்களுடன் தந்தை வழிபாட்டி ஜெயமாள்(70), தாய் வழி பாட்டி சாந்தி(52) ஆகியோர் உள்ளனர். எங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது தந்தையின் நிலம் மற்றும் வீட்டை மாவட்ட ஆட்சியர் மீட்டுக் கொடுக்க வேண்டும். அதனை நம்பிதான் எங்களது கல்வி மற்றும் எதிர்காலம் உள்ளது. கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த எங்களது பெற்றோரின் மரணத்துக்கு நீதி வேண்டும்.

மேலும் எங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பின்னர், ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x