Published : 24 Oct 2021 03:10 AM
Last Updated : 24 Oct 2021 03:10 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 82,847 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை 3 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மாபெறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் நேற்று 6-வது கட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதற்காக, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வேலூர் மாவட்டத்தில் 1,000 மையங்கள் மூலம் சுமார் 80 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3,500 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முகாம் நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களின் பட்டியலை வைத்து அவர்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூர் உழவர் சந்தை, டோல்கேட், தொரப்பாடி, அடுக்கம்பாறை, சாத்துமதுரை, கணியம்பாடி, நெல்வாய், விருபாட்சிபுரம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை ஆட்சியர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்து 4 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 313 நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. மொத்தம் 1,400 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற மாக்கனூர், ஆதியூர் ஊராட்சியில் ராவுத்தம்பட்டி, சு.பள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 21,158 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 950 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. தடுப்பூசி செலுத்தும் பணியில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு இருந்தது. ராணிப்பேட்டை, ஆற்காடு, திமிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 21,685 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 847 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment