Published : 21 Oct 2021 03:08 AM
Last Updated : 21 Oct 2021 03:08 AM
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆங்காங்கே தென்னையில் காண்டாமிருக வண்டின் தாக்குதல் காணப்படுகிறது.
இளம் கன்றுகள் மற்றும் வளர்ந்தமரத்தில் இந்த வண்டுகள் தாக்குதல் ஏற்படுத்தி பொருளாதாரச் சேதாரத்தை உண்டாக்கும்.
காண்டாமிருக வண்டுகளின் தாக்குதலிருந்து தென்னையை காக்க தோப்பினை சுத்தமாக வைப்பதுடன் ஆண்டுக்கு ஒரு முறை மரத்தின் மேல் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். எருக்குழிகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். இளம் கன்றுகளில் சேதத்தை தவிர்க்க 45 நாட்களுக்கு ஒரு முறை 4 கிராம் எடையுள்ள 3 நாப்தலின் உருண்டைகளை உள்மட்டையின் இடுக்குகளில் வைக்க வேண்டும்.
வளர்ந்த மரத்தின் குருத்துப் பகுதியில் உள்ள வண்டை கூர்மையான இரும்பு கம்பியால் வெளியில்எடுத்து அழிக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளர்ந்தமரங்களில் வேப்பம் புண்ணாக்கு ஒரு பங்கு மற்றும் இரு பங்கு மணல் கலந்து மரத்துக்கு 150 கிராம் வீதம் மட்டை இடுக்குகளில் இட வேண்டும். மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்கு பொறிகளை தோப்புக்குள் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
மேலும் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு 5 லிட்டர் நீரில் கலந்து சிறு மண்பானைகளில் நிரப்பி தோப்பில் ஆங்காங்கே வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT