Published : 19 Oct 2021 03:10 AM
Last Updated : 19 Oct 2021 03:10 AM
தீயில் குடிசைகள் எரிந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர்கள் மு.செந்தூர்பழனி, பி.கண்ணன் ஆகியோர் தலைமையில் அந்த அமைப்பினர் மற்றும் தெர்மல்நகர் அருகே கோயில்பிள்ளை நகர், ஏரல் அருகேயுள்ள இடையர்காடு, அண்ணாநகர் பகுதிகளைச் சேர்ந்த அருந்ததியர் சமுதாயத்தினர் நேற்றுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பாய், படுக்கைகளுடன் வந்தனர்.
ஆட்சியர் அலுவலக வராண்டாவில் பாய்களை விரித்து அமர்ந்து குடியேறும் போராட்டத்தை தொடங்கினர். போலீஸார் ஓடி வந்து அவர்களை கலைந்து போக வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் மறுத்துபாய்களில் படுத்துக் கொண்டனர். இதனால் அவர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கி போராட்டத்தை தடுத்து கலைந்து போகச் செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கோயில்பிள்ளை நகரின் பின்பகுதியில் பண்டுக்கரை பகுதியில் அருந்ததியர் வசிக்கும் குடிசைகளுக்கு கடந்த 14-ம் தேதி மர்ம நபர்கள் தீ வைத்தனர். 10 குடிசைகள் சேதமடைந்தன. எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், ஏரல் அருகேயுள்ள இடையர்காடு அண்ணாநகர் பகுதியில் அருந்ததியர் வசிக்கும் குடிசைப் பகுதியில் கடந்த 31.8.2021 அன்று மர்ம நபர்கள் தீவைத்ததில் 10-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் ச.மு.காந்தி மள்ளர் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு: ஓட்டப்பிடாரம் ஒன்றியம் அய்யனார்புரம், துப்பாசுபட்டி, வெள்ளப்பட்டி கிராமங்களில் அரசுக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்.
காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மா.மச்சேந்திரன் அளித்த மனு: புதுக்கோட்டையில் இருந்து சாயர்புரம், சிவகளை வழியாக வைகுண்டம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை இருவழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT