Published : 18 Oct 2021 03:10 AM
Last Updated : 18 Oct 2021 03:10 AM
நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்வேறு சுற்றுலா தலங்களும் ஆகஸ்ட் மாதம்23-ம் தேதிமுதல் திறக்கப்பட்ட நிலையில், உதகை அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் தொட்டபெட்டா மலைச்சிகரம் திறக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:
தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து மலைச்சிகரத்துக்கு செல்லும் சாலை தொடர் மழையால் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக சோதனைச் சாவடி அருகே தடுப்புகள் வைத்து, தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை அடைக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து நவீனதொலைநோக்கிகள் மூலம் உதகை நகரம், குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, மாவட்ட எல்லைகள், அடர்ந்த வனப்பகுதிகள், அணைகள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். மலைச்சிகரத்தில் நிலவும் பனிமூட்டம் மற்றும் காலநிலையை ரசிக்க பெரும்பாலான சுற்றுலா பயணிகள் விரும்புவர். எனவே உடனடியாக சாலையை சீரமைத்து, தொட்டபெட்டா செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். தொட்டபெட்டா சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள், அப்பகுதியில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கவும், மழைநீர் செல்ல அடிப்பகுதியில் குழாய் பொருத்தவும் திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘தொட்டபெட்டாவில் செயல் படும் சூழல் சுற்றுலா வனக்குழுவின் இருப்பில் உள்ள தொகையில் இருந்து பழுதடைந்துள்ள தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT