Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கூட்டுறவுத் துறை அரசு செயலர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆகியோர் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அரசு செயலர் நசிமுதின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் வி.ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வைக்கப்பட்டிருந்த விற்பனை பட்டியல், விவசாயிகள் தங்கள் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய மேற்கொள்ளும் முன்பதிவு முறைகள் ஆகியவற்றை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் அலுவலர்கள் ஈரப்பதம் கண்டறிந்தல், எடை அளவு, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளின் குறீயீடு உள்ளிட்ட கொள்முதல் முறைகளை அரசு செயலருக்கு எடுத்துரைத்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் நடப்பு பருவத்தில் கொள்முதல் செய்யும்போது உலர் களம் அமைத்தல், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்தல், தரமான நெல்லை கொள்முதல் செய்தல் போன்றவற்றுக்காக ஆட்சியர் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரிடம் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுமக்களுக்கு எவ்வாறு தரமான அரிசி வழங்குவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தின்போது மாவட்ட வருவாய் அலுவலவர் இரா.பன்னீர்செல்வம், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT