Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி யில் நடப்பு ஆண்டு எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடங்க தமிழக அரசு ஆலோசித்து வருவ தாகக் கூறப்படும் நிலையில் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்வதற்காக இன்று மதுரை வருகிறார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,264 கோடியில் கட்டப்பட இருக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு இந்தத் திட்டத்துக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. இத்திட்டத் துக்கு நிதி வழங்குவதாகக் கூறிய ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் தற்போது வரை அறிவிப்பு ஏதும் செய்யவில்லை.
நாட்டில் பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கியதால் அங்கு மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நிறைவடையும் நிலை யில் உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையின் கட்டுமானப்பணிகள் தொடங்குகிறதோ இல்லையோ, மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவும், அதன் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத் துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை எய்ம்ஸ் அமையவிருக்கும் இடத்தின் அருகே உள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் தற்காலிகமாக தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எய்ம்ஸ் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கலாம் என்றால் அங்கு ஏற்கெனவே 250 மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும், அங்கு போதிய வகுப்பறை வசதியும் இல்லை. கூடுதல் வகுப்பறைகளுக்காகக் கட்டப்பட்டு வரும் கட்டுமானப்பணியும் இன்னும் முடியவில்லை.
அதனால், எய்ம்ஸ் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தென்மாவட்டங்களில் சிவகங்கை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட ஏதாவது ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்குவதற்கு முடிவெடுக் கப்பட்டது. தற்போது மதுரை மருத்துவக் கல்லூரி கூடுதல் வகுப்பறைக் கட்டுமானப்பணிகள் 80 சதவீதம் நிறைவடையும் நிலையில் உள்ளன. அதனால், இந்தக் கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்தி அதில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாமா? என்று தமிழக சுகாதாரத் துறை ஆலோசித்து வருகிறது. அதனால், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கூடுதல் கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்ய இன்று (சனிக்கிழமை) வருகிறார். கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்து இன்னும் எத்தனை நாட்களுக்குள் முடிக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில் சிவகங்கை, விருதுநகர், தேனியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு ஜப்பான் நிறுவனம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் கடன் வழங்க வாய்ப்புள்ளது என்றும் மார்ச் மாதத்தில் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் தொடங்கி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT