Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பதில் நேற்று அதிகாலை வரை தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 688 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இப்பதவிகளில் 22 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 369 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற 5,706 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது.
விழுப்புரம் அருகே அரியலூர்திருக்கை கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அனிதா நாகராஜன் வெற்றி பெற்று விட்டதாகவும், அவர் வெற்றி பெற்றதை அறிவிக்க தாமதம் செய்வதாக கூறி அரியலூர் கிராமத்தில் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலையில் அக்கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த கெடார் போலீஸார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் அருகே வீரமூரில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெய்சங்கர் என்பவர் வெற்றி பெற்றதால் அவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜெய்சங்கர் தோல்வி அடைந்ததாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து வேட்பாளர் ஜெய்சங்கரின் தங்கைகள் ஜெயலட்சுமி, மஞ்சுளா ஆகிய இருவரும் காணை ஒன்றிய வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நுழைவுவாயில் முன்பு திடீரென தங்கள் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
இதற்கிடையே திருப்பாச் சனூர், அதனூர் கிராம மக்கள் தங்கள் கிராமத்தின் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக்கோரி நேற்று அதிகாலை விழுப்புரம் காந்தி சிலை அருகிலும், பின்னர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகேயும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலைமறியலை கைவிட செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT