Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்பு பணிகளுக்காக 21 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:
தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாராநிறுவனங்களின் உறுப்பினர்களின் பெயர்கள், அலைபேசி எண்கள் ஆகிய விவரங்களை https://www.tnsmart.tnsdma.tn.gov.in என்ற மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 126 இடங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படக் கூடிய இடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்கள் பற்றிய விவரங்கள் தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். வடகிழக்கு பருவமழையின்போது மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்த மண்டல குழுக்களில் 11 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இந்தக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT