Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM
தூத்துக்குடியில் காரில் வைத்திருந்த பட்டாசு வெடித்து பள்ளிக்கூடம், 37 வீடுகள் சேதமடைந்த வழக்கில் கைதானவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி புத்தன்தருவையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திருவிழாக்களுக்கு பட்டாசு விற்பனை செய்து வருகிறார். செப். 21-ல் பாலகிருஷ்ணன் திருவிழாவுக்கு கொண்டுச்செல்வதற்காக காரில் பட்டாசுக்களை ஏற்றி வைத்திருந்தார்.
வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தன. இதில் அவரது வீட்டின் அருகேயுள்ள 37 வீடுகளும், கிறிஸ்தவ ஆலயத்துடன் உள்ள பள்ளியும் சேதமடைந்தது.
தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
இவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், திருவிழாக்களுக்கு பட்டாசு விற்க உரிமம் பெற்றுள்ளேன். சேதமடைந்த வீடுகளையும், பள்ளியையும் புதுப்பித்துக் கொடுக்கத் தயாராக உள்ளேன். ஏற்கெனவே 3 வீடுகளை ரூ.4 லட்சம் செலவில் புதுப்பித்துக் கொடுத்துள்ளேன். மீதமுள்ள வீடுகளையும் புதுப்பித்துக் கொடுக்க தயாராக உள்ளேன். ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்தஉத்தரவு: வெடி விபத்தில் மனுதாரரும் காயம் அடைந்துள்ளார். சேதமடைந்த வீடுகளை புதுப்பித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் மனுதாரருக்கு அக். 27 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. வழக்கின் விசாரணை அறிக்கையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை அக். 28-க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT