Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் பழமையான சிற்பம் இருப்பதாக க.சிவன் அளித்த தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான து.முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். அது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வில் வீரன் சிற்பம் என கண்டறிந்தனர்.
இது குறித்து அவர் கூறியதாவது: சங்க காலம் முதல் தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறைக்கு முக்கிய பங்குண்டு. நடுகல் என்பது போரில் இறந் தோரின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக்கல். அதன்படி தென்னமநல்லூரில் வில் வீரன் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.
இது 4 அடி உயரம், 2 அடி அகலம் 12 செ.மீ தடிமனுடைய கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் வீரனின் இடது கையில் வில், வலது கை இடுப்பில் நீண்ட வாள் உள்ளது. தலையில் கொண்டை, காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்க ஆபரணங்கள், மார்பில் போர்வீரர்கள் அணியும் சன்னவீரம் காணப்படுகிறது. வீரனின் இடுப்பில் சலங்கை, பதக்கம்,கை,கால்களில் வீரக்கழலும் அணிந்து முன்னங்காலை ஊன்றிப் போருக்குச் செல்வதுபோல் உள்ளது.
இச்சிற்பத்தை ஆய்வு செய்ததில், இப்பகுதியில் வில் வித்தையில் புகழ் பெற்று இறந்த போர் வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடு கல்லாக இருக்கலாம். இது கிபி 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தற்போது மக்கள் வேட்டைக்காரன் கோயில் என்று வழிபடுகின்றனர் என்றார்.
இந்தக் கள ஆய்வில் ஆனந்தகுமரன், மணிகண்டன், தர்மர், வைகிராஜா ஆகியோரும் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT