Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM
மதுரையில் பறவைகளின் சொர்க் கபுரியான கரிசல்குளம் கண்மாய், அவனியாபுரம் கண்மாயில் உள்ள குப்பைகளை அகற்றினால் வலசை வரக்கூடிய பறவைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பறவையியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அமெரிக்கன் கல்லூரியின் பசுமைச் சங்கம் சார்பில் பறவை காணுதல் நிகழ்வு கரிசல்குளம் கண்மாய் மற்றும் அவனியாபுரம் கண்மாயில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வை மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் மதுரை ஒருங்கிணைப்பாளர் அகில் ரிஷி ராஜசேகரன், அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் ஒருங்கிணைத்தனர்.
பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், குழந்தைகள், இயற்கை மற்றும் பறவை ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பறவை இனங்களையும், அவற்றின் தனித்துவம் மற்றும் பழக்கங்களையும் கண்டறிந்தனர். வலசை வந்த பறவைகளான நீலச் சிறகி, தகைவிலான், பழுப்புக் கீச்சான், உள்ளான் மற்றும் முக்குளிப்பான், நீர்க்காகம், பாம்புத்தாரா, செந்நாரை, உண்ணிக் கொக்கு, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், நீல தாழைக் கோழி, புள்ளி மூக்கு வாத்து ஆகியப் பறவைகளையும் கண்டுகளித்தனர்.
மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு, நான்கு கண்மாய்களை மதுரையில் தேர்வு செய்து அவற்றுக்கு வரும் வலசைப் பறவைகளை ஆவணப்படுத்திக் கொண்டு வருகிறது என்றும், இந்த கண்மாயில் இருக்கக்கூடிய குப்பைக்கூளங்களை அகற்றினால் வலசை பறவைகள் அதிகமாக வரும் என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT