Published : 10 Oct 2021 03:16 AM
Last Updated : 10 Oct 2021 03:16 AM

திருப்பூர் மாவட்டத்தில் - உள்ளாட்சி பதவிகளுக்கு 140 மையங்களில் இடைத்தேர்தல் : ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்

திருப்பூர்/உதகை

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. 140 வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காங்கயம் வட்டாரத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு 10-க்கானஉறுப்பினர் தேர்தல் மற்றும் தாராபுரம் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றியவார்டு எண் 12-க்கும் தேர்தல் நடந்தது. அதேபோல, அவிநாசிவட்டாரம் கருவலூர், மூலனூர் வட்டாரம் எரிசனம்பாளையம் மற்றும் உடுமலை வட்டாரம் ஆர்.வேலூர் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. கிராம ஊராட்சி வார்டுஉறுப்பினர்கள் 12 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

உடுமலை ஒன்றியத்துக்குட் பட்ட ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. மாவட்டம் முழுவதும், 7 வார்டு உறுப்பினர்கள் உட்பட 12 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

கருவலூரில் நேற்று காலை லேசான மழை பெய்த போதிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாவட்டம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி, 13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 11 மணி நிலவரப்படி 30.71 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 45.41 சதவீதமும், மாலை 3 மணிக்கு 56.57 சதவீதமும் , மாலை 6 மணிக்கு 68.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 70.24 சதவீத ஆண் வாக்காளர்களும், 66.8 சதவீத பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான இடைத்தேர்தல் மசினகுடி 4, சேரங்கோடு 11 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது. அதேபோல கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு உறுப்பினர் தேர்வுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

மசினகுடியில் ஆட்கொல்லி புலி அச்சம் நிலவும் நேரத்திலும், 4-வது வார்டுக்கான உறுப்பினரை தேர்வு செய்யும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பொதுமக்கள் பதிவு செய்தனர். மூன்று வார்டுகளில் நேற்று இரவு 7 மணி வரை 62.79 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தம் 4,535 வாக்குகளில் 2,773 வாக்குகள் பதிவாகின. அதில், 1,371 ஆண்கள் வாக்காளர்களும், 1,402 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x