Published : 10 Oct 2021 03:17 AM
Last Updated : 10 Oct 2021 03:17 AM

திருவள்ளூரில் இடைத்தேர்தல் 59.5 சதவீத வாக்குகள் பதிவு :

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரகஉள்ளாட்சியின் 25 பதவிகளுக்கு நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 59.45 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியின் 25 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்றுநடைபெற்றது. இத்தேர்தலில், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 பேர், 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 10 பேர், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், ஆலாடு, திருவெள்ளவாயல், தாமனேரி, கொசவன்பாளையம் ஆகிய4 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 13 பேர், 17 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 47 பேர் என 93 பேர் போட்டியிட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

40 பதற்றமான வாக்குச் சாவடிகள் உட்பட 81 வாக்குச் சாவடிகளில், 405 தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள், போதிய போலீஸ் பாதுகாப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சகிதம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு அமைதியான முறையில், இந்த வாக்குப் பதிவு நிறைவடைந்தது.

வெயிலின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் அதிகஅளவில் வராததால், காலை முதல், மாலை வரை, பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு சற்று சுணக்கமாக நடைபெற்றது.

இதனால், காலை 9 மணிக்கு 11.60 சதவீதம், 11 மணிக்கு 29.37 சதவீதம், மதியம் 1 மணிக்கு 39.50%, 3 மணிக்கு 47.59% என, இருந்த வாக்குப் பதிவு, மாலை6 மணிக்கு நிறைவு பெற்றது.

இதில், இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த 23,555 ஆண் வாக்காளர்கள், 24,538 பெண்வாக்காளர்கள், 11 மூன்றாம் பாலினத்தவர்கள் என 48,104 வாக்காளர்களில், 28,598 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் 59.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த வாக்குப் பதிவின்போது, மூத்த குடிமக்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்து, தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியதை பல வாக்குச் சாவடிகளில் காணமுடிந்தது.

ஆட்சியர் ஆய்வு

மேலும், சோழவரம் ஊராட்சிஒன்றியம் - நல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட வாக்குச் சாவடிகளில் நடந்த வாக்குப் பதிவை மாவட்டதேர்தல் பார்வையாளர் ஞானசேகரன், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x