Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களை தடுக்க தன்னார்வ அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சேலம் சரக டிஐஜி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குழந்தைத் திருமண தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி தொடங்கி வைத்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய கையேட்டை குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டிஐஜி பேசியதாவது:
பெண் குழந்தை பிறந்தால் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்து வைத்து விட்டால் கடமை முடிந்து விட்டதாக பெற்றோர் நினைக்கின்றனர். அதை எதிர்த்து போராடி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. இதனால் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி. கிருத்திகா, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வீரம் மற்றும் சக்தி என்கிற பெயரில் தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி. அவர்களது மொபைல் எண், பெயர் உள்ளிட்ட விவரங்களை பெற்றுள்ளார். இவர்கள் எங்காவது குழந்தைத் திருமணம் நடக்கிறது என்றால் அந்த தகவல்களை போலீஸாருக்கு தெரிவிப்பார்கள்.
தேன்கனிக்கோட்டை உட்கோட் டத்தில் மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் ராஜு, விவே கானந்தன், தேன்கனிக் கோட்டை டிஎஸ்பி கிருத்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், குழந்தைகள் நலக் குழுமம் தலைவர் கலை வாணி, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்ஐ.க்கள் சிவராஜ், கெலமங்கலம் பார்த்திபன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT