Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM

வாக்கு எண்ணிக்கையை - பாரபட்சமின்றி நடத்த அதிமுக கோரிக்கை மனு :

செங்கல்பட்டு

செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் புகார் மனுவை அளித்தனர். அந்த மனு விவரம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பலர், தங்கள் கட்சியைச் சார்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாங்கள் வாக்குகள் குறைவாக பெற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவீர்கள் கவலைப்பட வேண்டாம் என்று தங்களுக்கு நம்பிக்கையூட்டி இருப்பதாக எங்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் தகவல் வருகிறது.

எனவே தேர்தல் நாள் அன்றும், அதைத் தொடர்ந்து நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போதும், அனைத்து நிலை தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் விதிகளை 100% கடைபிடித்து பாரபட்சம் இன்றி செயல்பட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் வாக்கு பெட்டிகள், அனைத்து வேட்பாளர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணி முடிக்கப்பட்டவுடன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்கிவிட்டு அதன் பின்னர் அடுத்த பதவிக்கான வாக்கு பெட்டிகளை எண்ண வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x