Published : 09 Oct 2021 03:11 AM
Last Updated : 09 Oct 2021 03:11 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 25 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று (அக். 9) இடைத்தேர்தல் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 6 ஒன்றியங்களுக்கு 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. காஞ்சி, செங்கை மாவட்டங்களில் பாதுகாப்புப் பணியில் 3,200 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி தலைவர் பதவிகள், 4 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 30 வார்டு உறுப்பினர் பதவிகள் என 38 பதவிகள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கலின் போது, 13 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆகவே, அந்த 13 பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 25 பதவிகளுக்கு இன்று ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் 81 வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது. இதில், பதற்றமான 40 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட உள்ளது.
வாக்குப் பதிவுக்கு தேவையான பொருட்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து நேற்று வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்குச் சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு நடவடிக்கை
அதுமட்டுமல்லாமல், வாக்குப் பதிவு எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடக்க ஏதுவாக 81 வாக்குச் சாவடிகளிலும் போதிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் 2 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர் என, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 3 ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பி, 9 காவல் ஆய்வாளர்கள், 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 6 அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டு அவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தப் பகுதியில் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் 2,600 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
குளறுபடிகள் வேண்டாம்
முதல்கட்ட தேர்தலில் பல குழப்பங்களும், குளறுபடிகளும் நடைபெற்றன. குறிப்பாக வாக்களிக்கும் பள்ளிகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளரின் விவரங்கள் ஒட்டப்படவில்லை, பூத் ஸ்லிப் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை.வாக்குச்சீட்டு குறைவாக இருந்ததால் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்க காலதாமதம் ஆனது. பல இடங்களில் வாக்குப் பெட்டிகள் குறைவாக அனுப்பப்பட்டு இருந்தன. எனவே, இரண்டாம் கட்ட தேர்தலில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேட்பாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT