Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால், சாலைகள், அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல், நேற்று அதிகாலை வரை சராசரியாக 7 செமீ மழை பெய்துள்ளது. திருத்தணியில் 12 செமீ, திருவாலங்காடு 10, திருவள்ளூர், பொன்னேரியில் தலா 9, சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 8, பூண்டி, ஊத்துக்கோட்டையில் தலா 7, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, ஆர்.கே.பேட்டையில் தலா 6, செங்குன்றம், பள்ளிப்பட்டு, ஜமீன் கொரட்டூரில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த மழையால், முக்கிய சாலைகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் தேங்கியதால், நோயாளிகள், மருத்துவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.
ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் பகுதியில், ஆதிதிராவிடர் நலத் துறையால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தொகுப்பு வீடு ஒன்றின் மேற்கூரை நேற்று முன்தினம் காலை இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சுபாஷினி(45) உயிரிழந்தார்.
திருத்தணி - சித்தூர் சாலையில், கே.ஜி.கண்டிகையில் நேற்று காலை சுமார் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடுசாய்ந்தது. அப்போது, சாலையில் வாகனங்கள் வராததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. திருத்தணி போலீஸார், தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடம் விரைந்து, சாலை சரிந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, நேற்று அதிகாலையில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.
இதில், திருப்போரூரில் 54.1 மிமீ, செங்கல்பட்டு 55.3, திருக்கழுக்குன்றம் 31.2, மாமல்லபுரம் 60.4, மதுராந்தகம் 35, செய்யூர் 67.5, தாம்பரம் 76.9, கேளம்பாக்கம் 109.6 மிமீ என மழையளவு பதிவாகியது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், காஞ்சிபுரத்தில் 184 மிமீ, பெரும்புதூர் 89.40, உத்திரமேரூர் 72.80, வாலாஜாபாத் 68.90, செம்பரம்பாக்கம் 48 மிமீ என மழையளவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT