Published : 07 Oct 2021 03:16 AM
Last Updated : 07 Oct 2021 03:16 AM
ஆரணி அருகே சாலையில் கழிவு நீருடன் மழைநீர் தேங்கி கிடப்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் ரூ.1.25 கோடியில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணி முழுமைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், மழைநீர் வழிந்தோட வழி இல்லாமல் தடைபட்டுள்ளது.
கழிவுநீருடன் மழைநீரும் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனாலும், நடவடிக்கை எடுக்க யாரும் முன்வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று வேலூர் – ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஊரான எங்கள் பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால், அந்தப் பணி முழுமை பெறாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, ஏற்கெனவே செய்யப்பட்ட பணிக்கு பணம் வழங்கவில்லை என கூறுகிறார். பணிகள் தடைபட்டு இருப்பதால், மழைநீர் செல்ல வழியில்லை.
இதனால், கழிவுநீருடன் மழைநீரும் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக, பணியை விரைவாக முடிக்கமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையிலான காவல்துறையி னர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர், தடைபட்டுள்ள பணியை மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும், தற்காலிகமாக சாலையில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT