Published : 05 Oct 2021 03:13 AM
Last Updated : 05 Oct 2021 03:13 AM

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் - மீண்டும் உயர்ந்து நிற்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் : ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வலியுறுத்தல்

சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏவுமான சிந்தனைச்செல்வன் பேட்டிளித்தார்.

கடலூர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மீண்டும் உயர்ந்து விளங்க தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரான சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏயுமான சிந்தனைச்செல்வன் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

கல்வியில் பின் தங்கிய கடலூர் மாவட்டத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அரசு இந்தப் பல்கலைக்கழகத்தை ஏற்று சுமார் 9 ஆண்டுகள் ஆன பிறகும் பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. நிர்வாக சிக்கலில் பல்கலைக்கழகம் சிக்கித் தவித்து வருகிறது. பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள ஊழியர்களுக்கு நியாயமான உரிமை, சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீபத்தில் நடந்த ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் தொகுப் பூதியர்களுக்கு 2 மாதங்கள் மட்டுமே பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவர்களை விரைவில் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு பணி பாதுகாப்பை வழங்க வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பணப் பயன்கள், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்தும் பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டும். பல்கலைக்கழகம் நிதிச் சிக்கலில் இருந்து மீள்வதற்கு தமிழக முதல்வர் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் முன் னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ஆய்வறிக்கையை அமைக்க வேண்டும். பவுத்தம், சமணம் ஆகிய இந்திய மரபுகள் குறித்து ஆய்வு செய்ய ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வியலை,சங்க கால வாழ்வியலைப் பற்றிய தமிழர் வாழ்வியல் கூடம் அமைக்கவேண்டும். தமிழ் வழியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். நிதி நெருக்கடி உள்ளது என்பதை காரணம் காட்டாமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மீண்டும் உயர்ந்து நிற்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக் கழகத்தில் சிறப்பு ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தி பல்கலைக்கழகம் இயல்பு நிலைக்கு திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x