Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டத்தைஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக தூய்மைப் பணியாளர்களுக்கான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி, பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்சிறப்பு விருந்தினராக பங்கேற்றுதூய்மைப் பணியாளர்களிடமிருந்து ஆயுள் காப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ள, சம்பந்தப்பட்டஅலுவலர்களை அறிவுறுத்தினார்.
பின்னர், விழாவில் பேசிய ஆட்சியர், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் மாதச் சம்பளம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அனைவரும் காப்பீடு எடுப்பது என்பது மிக அவசியமானதாகும். எதிர்பாராமல் நிகழும் ஆபத்தால் ஏற்படும் இடர்களை சரிசெய்ய காப்பீட்டு திட்டம் உதவியாக இருக்கும்.
இக்காப்பீடு நம் வருமானத்தை நம்பியுள்ளவர்களுக்கும், நம்மை சார்ந்துள்ளவர்களுக்கும் பயன் கிடைக்கக் கூடியதாக அமையும். மிகக் குறைந்த அளவில் காப்பீடு செய்ய பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டு பிரீமியம் ரூ.330 செலுத்துவதன் மூலம் ரூ.2 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டு பிரீமியம் ரூ.12 செலுத்துவதன் மூலம் ரூ.2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு என இத்திட்டங்கள் மூலம் பயன் பெறலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில்பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அந்தந்த ஊராட்சியே பணம் செலுத்தி அனைத்து தூய்மைப் பணியாளர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். காப்பீட்டுக்கான உரிய ஆவணங்களைபாதுகாப்பாக வைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.
இவ்விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் டி.ஏ.சீனிவாசன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி நாதன், வெங்கடேசன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜெயசீலி, காக்களூர் ஊராட்சித் தலைவர் சுபத்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT