Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குவளக்குடி ஊராட்சியில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் அழகு கே.செந்தில் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
கூட்டத்தில், கரோனா தொற்றுக் காலத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் பள்ளி என்ற புதிய திட்டம் அக்.18-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகள் தவிர்த்த மீதமுள்ள 286 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில்...
கரூர் அருகேயுள்ள மண்மங்கலம் ஊராட்சி சிவியாம்பாளையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமாள் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பழனி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்....
கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, ‘‘கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, கோட்டாட்சியர் நிறைமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில்...
செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளாங்குடி ஊராட்சியில் அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, இளையபெருமாள் நல்லூர் கிராமத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வ மற்றும் பொதுமக்கள் ஈடுபடுதல் மற்றும் பல்வேறு திட்டங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமை வகித்தார். அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று பேசினார். கொத்தமங்கலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரம்யாதேவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார். புதுக்கோட்டை அருகே முள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் கவிதா ராமு கலந்துகொண்டார்.நெடுவாசலில் நடைபெற்ற கூட்டத்தில், எரிபொருள் பரிசோதனைக்காக ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளை அகற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT