Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM
பெரம்பலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்து தேங்குவதால், அங்கு வரும் பொதுமக்களும், அஞ்சலக ஊழியர்களும் பெரிதும் அவதியடைகின்றனர்.
பெரம்பலூர் கடைவீதி பகுதியில், அஞ்சல் துறைக்கு சொந்தமான நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிடத்தில் தலைமை அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் மிகவும் சேதமடைந்திருப்பதால், கடந்த சில மாதங்களாக மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும், அதே கட்டிடத்தில் அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்களும், வந்துசெல்லும் பொதுமக்களும் அசவுகரியமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அஞ்சல் அலுவலகத்தின் தரைத் தளம், சாலை மட்டத்துக்கு கீழாக இருப்பதால், சாதாரண மழைக்கே அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. கடந்த சில நாட்களாக பெரம்பலூரில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், அலுவலக கட்டிடத்துக்குள் எப்போதும் மழைநீர் தேங்கியிருப்பதால், கவுன்ட்டர்களில் நின்றபடியே ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இது தலைமை அஞ்சல் அலுவலகம் என்பதால், தினமும் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள், ஓய்வூதிய பயனாளிகள் வந்துசெல்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன்கருதி மராமத்துப் பணிகள் முடியும்வரை தலைமை அஞ்சல் அலுவலகத்தை தற்காலிகமாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
இப்போதுள்ள அலுவலகத்தின் தரைத்தளத்தை உயர்த்தி, அலுவலகத்துக்குள் மழைநீர் நுழையாதபடி நிரந்தர மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT