Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM
சணல் உற்பத்தியில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது என மத்திய ஜவுளித்துறை இணை செயலாளர் சஞ்சய் சரண் தெரிவித்தார்.
இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவனம் மற்றும் சணல் வாரியம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு, சாலை மேம்பாட்டில் சணலின் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் வரவேற்றார்.
சணல் வாரிய ஆணையர் மோலாய் சந்தன் சக்கரபர்த்தி பேசியதாவது: சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மண், நீர் வளப் பாதுகாப்பில் சணல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சணல் பயிர்கள் 15 மெட்ரிக் டன்கார்பன்-டை-ஆக்சைடை உட் கொண்டு, 11 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளியிடுகிறது. மண்ணில் உயிரி சத்துகளை அதிகரிக்க செய்து சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மையின் தரத்தை அதிகரிக்கிறது. சர்வதேச அளவில் சணல் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தாண்டு ரூ.1,500 கோடி அளவுக்கு சணல் ஏற்றுமதி நடந்துள்ளது. கரோனா காலத்தில் பிற துறைகள் பின் தங்கிய நிலையிலும், சணல் ஏற்றுமதி கடந்தாண்டில் உச்சத்தை எட்டியது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள் என்பதால் ஐரோப்பாவில் சணல் சாகுபடி 400 சதவீதம் அதிகரித்துள்ளது. பிற நாடுகளும் தற்போது சணல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில், ஜவுளித்துறை இணை செயலாளர் சஞ்சய் சரண் பேசும்போது, ‘‘இந்தியாவில் 3 இயற்கையான நார் பயிர் வகைகள்பயிரிடப்படுகின்றன. மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளதால், சணல்துறையில் இந்தியாமுன்னோடியாக திகழ்கிறது.இந்தியாவில் 40 லட்சம் சணல்விவசாயிகள் உள்ளனர். 100 சணல்மில்கள் இயங்குகின்றன. சணல் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறையில் உள்ள தொழில்நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதால், ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும்’’ என்றார். சணல் வாரிய இணை இயக்குநர் மஹாதேப் தத்தா நன்றி கூறினார். கருத்தரங்கில், சணல் வாரிய அதிகாரிகள் மற்றும் இந்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு நிறுவன விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT