Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM
வேப்பனப்பள்ளி அருகே மா விவசாயிகள் இடைப்பருவம் மாங்காய் விளைச்சலில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மாம்பழம் உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது மா மரங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மா விவசாயிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டும், மருந்துகள் தெளித்து சீர் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தை மாதத்தில் பூக்கள் பூக்கும். அதனை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மா சீசன் தொடங்கும். இதையடுத்து ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் முற்றிலும் நிறைவடையும். கடந்த சில ஆண்டுகளாக மாவிவசாயிகள் தொடர் இழப்பினை சந்தித்து வருகின்றனர். நிகழாண்டில் மாவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இடைப்பருவத்தில் மாவிளைச்சல் மேற்கொள்வதில் விவசாயிகள் சிலர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இடைப் பருவத்தில் விளைவிக்கப்படும் மாவிற்கு நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வேப்பனப்பள்ளி பகுதி விவசாயிகள் கூறும்போது, மா விளைச்சல் காலங்களில் மா மரங்களில் பூக்களை வளர விடாமல் தடுத்து, செப்டம்பர் மாதம் முதல் பூக்கள் வளர ஏதுவாக மரங்கள் பராமரிக்கப்படும். அதையடுத்து சீதோஷ்ணநிலைக்கு ஏற்றவாறு தேவையான உரங்கள் அளித்து மாசாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. பெங்களூரா, நீலம் மற்றும் செந்தூரா உள்ளிட்ட ரக மாங்காய்கள் மட்டுமே இடைப்பருவ மா உற்பத்தியில் விளைவிக்க முடியும்.
மாங்காய்கள் டன்னுக்கு ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கிறது. சீசன் காலங்களில் இந்த ரக மாங்காய்களுக்கு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் கூட கிடைப்பதில்லை. தற்போது 3 ஏக்கர் மாந்தோப்பில் 30 டன் மாங்காய்கள் விளைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பலர் இடைப்பருவ மாங்காய்கள் விளைச்சலில் ஆர்வம் காட்டி வருகின்றனர், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT