Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM
தி.மலையில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று நடத்திய சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது.
தி.மலை நகரம் மணலூர்பேட்டை சாலையில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் இயங்குகிறது. இங்கு, தி.மலை மாவட்டத்தில் அமைக்கப்படும் மனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படுகிறது. அப்போது, பெரும் தொகை கைமாறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆய்வாளர்கள் அன்பழகன், மைதிலி உட்பட 10 பேர் அடங்கிய குழுவினர் நேற்று நண்பகல் 12.30 மணிக்கு அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.
உதவி இயக்குநர் மோகன் அறை உட்பட அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். இதில், கழிப்பறைகளும் தப்பவில்லை. அப்போது உதவி இயக்குநர் மோகனின் மேஜை பெட்டியில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது. இதேபோல், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் சிக்கியது. மேலும், அலுவலகம் உள்ளே இருந்த இடைத்தரகர்கள் மற்றும் மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் கேட்டு வந்தவர்களிடம் இருந்து பெரும் தொகை சிக்கியதாக கூறப்படுகிறது.
7 மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் மொத்தம் ரூ.3 லட்சம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உதவி இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
வந்தவாசியில் ரூ.30 ஆயிரம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பத்திரப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது, சந்தை மதிப்பை விட, வீட்டு மனைகளுக்கு குறைந்த மதிப்பீடு செய்வதற்காக, இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் கைமாறியுள்ளது. இதையறிந்த, தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சார் பதிவாளர் மேஜை உட்பட அனைத்து பகுதிகளையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் நேற்றிரவு சிக்கியது. லஞ்ச பணத்தை, அலுவலர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்
அதன்படி, வேலூர் வேலப்பாடி யில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் விஜய் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் சென்ற காவலர்கள் அலுவலக முன் வாசல் கதவை பூட்டி சோதனையை தொடங்கினர்.
அப்போது, அந்த அலுவல கத்தில் சார் பதிவாளர் வனிதா மற்றும் ஊழியர்களுடன் இடைத் தரகர்கள், பொதுமக்கள் சிலரும் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு நபரையும் சோதனை செய்ததுடன் அங்கிருந்த அறைகள், பொருட்கள் வைப்பறை, கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 900 பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் தொடர்பாக சார் பதிவாளர் வனிதாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில் அது தொடர்பாக விளக்கம் பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சோதனையால் இரவு 10 மணி வரை சலசலப்பான சூழல் நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT