Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM
காங்கயம் அரிசி ஆலை உரிமையாளர் மகனைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், கைது செய்யப்பட்ட 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அரிசி ஆலை நடத்தி வருபவர் தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மகன் சிவபிரதீப் (22). கடந்த மாதம் 22-ம் தேதி இவரும், கார் டிரைவரான சதாம் உசேனும் (27) காரில் சென்றபோது, அவர்களை 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. ஈஸ்வரமூர்த்தியை அலைபேசியில் தொடர்புகொண்டு ரூ.3 கோடி கேட்டும், பணம் தராவிட்டால் சிவபிரதீப்பை கொலை செய்து விடுவோம் எனவும் அக்கும்பல் மிரட்டியது.
அன்றைய தினம் இரவு கடத்தல் கும்பல் தெரிவித்த இடத்தில், ரூ.3 கோடியை கொடுத்து, இருவரையும் ஈஸ்வரமூர்த்தி மீட்டார்.
புகாரின்பேரில் காங்கயம் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சசாங் சாய் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடத்தல் தொடர்பாக திண்டிவனத்தை சேர்ந்த சக்திவேல் (37), கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த பஷீர் (32), பழையபேட்டையை சேர்ந்த சையத் அகமதுல்லா (45), திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூரை சேர்ந்த ஜாபர் சாதிக் (37), மதுரையை சேர்ந்த அகஸ்டின் (45), பாலன், ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பாலாஜி (38) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் 7 பேரையும், ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த உத்தரவுக்கான நகல்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரிடமும் நேற்று போலீஸார் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT