Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM
திருப்பூர் பின்னலாடை துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இங்கு தொழிலாளர்களுக்குசம்பளம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் பேச்சுவார்த்தை மூலமாக உயர்த்தப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்பது முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்தது. அந்த வகையில், 2016-ம் ஆண்டு போடப்பட்ட சம்பள உயர்வு ஒப்பந்தம், கடந்தாண்டு 2020 மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியானது. புதிய ஒப்பந்தம் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 32 சதவீத சம்பள உயர்வு அளிக்க தொழில் துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் தரப்பில் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த ஒப்பந்தம் சைமா அலுவலகத்தில் நேற்று கையெழுத்தானது.
ஒப்பந்தப்படி அனைத்து பின்னலாடை தொழிலாளர்களுக்கும் (பீஸ் ரேட் தொழிலாளர்கள் உட்பட) நடைமுறை அடிப்படை சம்பளத்தில் இருந்து சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. அதன்படி, கட்டிங், டெய்லரிங், அயர்ன், பேக்கிங், நிட்டிங் மெஷின் ஆகியோருக்கு தற்போது நடைமுறை அடிப்படை சம்பளம் ரூ.216.37 ஆக உள்ளது. புதிய ஒப்பந்தப்படி 32 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை 19 சதவீதம், 2-ம் ஆண்டில் இதே தேதி அடிப்படையில் 5 சதவீதமும், 3-ம் ஆண்டில் 4 சதவீதமும், 4-ம் ஆண்டில் 4 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது.
இதேபோல் செக்கிங் தொழிலாளர்களுக்கு ரூ.123.54, லேபிள் வைப்பவர்கள் ரூ.111.27, கைமடிப்பவர்கள் ரூ.108.24, டேமேஜ் பார்ப்பவர்கள் ரூ.86.48, அடுக்கி கட்டுதல் போன்ற உதவியாளர்கள் ரூ.61.95, பேப்ரிகேஷன் ரூ.201.62 நடைமுறை சம்பளம் உள்ளது. அனைவருக்கும் 32 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதோடு, ரூ.25 பயணப்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் இருதரப்பினர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதில், பேச்சுவார்த்தை குழுத் தலைவர் பிரேம் துரைசாமி, தொழில் துறையினர் சார்பில் சைமா தலைவர் வைக்கிங் ஏ.சி.ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம், சிம்கா தலைவர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கங்கள் சார்பில் ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎஃப், ஏடிபி, எம்எல்எஃப், ஐஎன்டியுசி, பிஎம்எஸ், ஹெச்எம்எஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT