Published : 28 Sep 2021 03:19 AM
Last Updated : 28 Sep 2021 03:19 AM
கோரிப்பாளையம் சந்திப்பு, சிம்மக்கல்-பெரியார் நிலையம் வரை மேம்பாலங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த ரூ.184 கோடி ஒதுக்கப்பட்டு 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இன்னும் பாலப் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது மீண்டும் மண் பரிசோதனை செய்து வருவதால் மீண்டும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காளவாசல் மேம்பாலம், நத்தம் சாலை பறக்கும் பாலத்துக்கு முன்பே கோரிப்பாளையம் மற்றும் சிம்மக்கல் மேம்பாலங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்தன. இந்த பாலங்களுக்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. சிம்மக்கல்-பெரியார் நிலையம் மேம்பாலத்துக்கு ரூ.34 கோடியும், கோரிப்பாளையம் மேம்பாலத்துக்கு ரூ.150 கோடியும் வழங்கப்பட்டு, தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறையின் கையிருப்பில் உள்ளது.
ஆனால் தற்போது வரை இந்த பாலப் பணிகள் திட்டமிட்டப்படி தொடங்கப்படவில்லை. கோரிப்பாளையம் மேம்பாலம், நத்தம் பறக்கும் பாலம் முடியக்கூடிய தல்லாகுளத்தில் தொடங்கி கோரிப்பாளையம் வரை ஏவி மேம்பாலத்துடன் இணைக்கப்படுகிறது. இப்பாலத்தில் கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து செல்லூர் வரை ஒரு இணைப்பு பாலம் வலதுபுறமாக செல்கிறது.
இந்த பாலம் அமைந்தால் கோிரிப்பாளையம் சிக்னல், தல்லாகுளம், செல்லூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். அரசு ராஜாஜி மருத்துவமனை, கோரிப்பாளையம் செல்வோர் பாலத்துக்கு கீழே சென்றுவிடுவார்கள். ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிவோரும் நெரிசலில் சிக்காமல் விரைவாக செல்வதற்கு உதவியாக இருக்கும்.
சிம்மக்கல், பெரியார் நிலையம் செல்வோர் பாலத்தின் வழியாக கோரிப்பாளையம் சிக்னலில் நிற்காமல் சென்றுவிடலாம்.
அதேபோல், ஏவி மேம்பாலத்தின் தொடர்ச்சியாக சிம்மக்கல் அண்ணா சிலையில் இருந்து பெரியார் நிலையம் கட்டப்பொம்மன் சிலை வரை பறக்கும் பாலம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாலம் அமைந்தால் சிம்மக்கல்லில் காலங்காலமாக தொடரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இந்த இரு மேம்பாலங்களும் திட்டமிட்டப்படி அமைந்தால் மதுரையின் இதயப்பகுதியான கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் நிலையம் பகுதிகள் நெரிசலில் இருந்து மீளும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கோரிப்பாளையம் மேம்பாலத்துக்கான மண் பரிசோதனை கடந்த சில நாட்களாக அப்பகுதியில் நடந்து வருகிறது. அதனால் கோரிப்பாளையம் மேம்பாலத்துக்கான சிக்கல்கள் தீர்ந்துவிட்டதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது உண்மை. சிம்மக்கல்பறக்கும் பாலத்துக்கு கையகப்படுத்த வேண்டியது பெரும்பாலும் அரசு நிலங்கள்தான். அதனால் அதில் சிரமங்கள் இல்லை. கோரிப்பாளையம் மேம்பாலத்துக்கு தனியார் நிலத்தை கையகப்படுத்துவதில்தான் தொடர்ந்து சிக்கல்கள் நீடிக்கின்றது,’’ என்றார்.
உள்ளூர் அமைச்சர்கள் இதில் தலையிட்டு, இரண்டு பாலங்கள் கட்டுவதிலும் உள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT