Published : 28 Sep 2021 03:20 AM
Last Updated : 28 Sep 2021 03:20 AM

ரெட்டிச்சாவடி, கண்டமங்கலம் வெடிகுண்டு வீச்சு சம்பவங்களில் - குண்டர் சட்டத்தில் 4 இளைஞர்கள் கைது :

கடலூர்/விழுப்புரம்

ரெட்டிச்சாவடி அருகே வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ரெட்டிச்சாவடி அடுத்த குமரப்பரெட்டிசாவடி, மலட்டாறு அருகே கடந்த 30.06.2021 அதிகாலை வெடிகுண்டு வீசப்பட்டதில் வேல்முருகன் என்பவர் காயம் அடைந்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு செல்லஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தேவா என்ற தேவன்(24), புதுச்சேரி கரிக்கலாம்பக்கம் அருணாச்சலம் (23), கீழ்குமாரமங்கலம் ஹேமந்த்( 20), களையூர் ராம்கி(25), புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் சின்ன அய்யனார் என்ற ரோஸ் ஐய்யனார்( 21), விநாயகமூர்த்தி(31) ஆகிய 6 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

முக்கிய குற்றவாளி மீது நடவடிக்கை

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான தேவா என்ற தேவன் மீது புதுச்சத்திரம் மற்றும் சிதம்பரம் தாலுகா காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் எஸ்பி சக்திகணேசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் குண்டர் தடுப்பு சட்டத்தில் தேவாவை கைது செய்ய உத்தரவிட்டார்.

கடலூர் மத்திய சிறையில் உள்ள தேவாவிடம் அதற்கான உத்தரவு நகலை போலீஸார் வழங்கினர். ஏற்கெனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அருணாச்சலம், விநாயகமூர்த்தி, சின்ன ஐய்யனார் என்ற ரோஸ் ஐய்யனார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கண்டமங்கலம் சம்பவத்தில் 3 பேர் கைது

கண்டமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கண்டமங்கலம் அருகே பள்ளிபுதுப்பட்டு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஒரு கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக கண்டமங்கலம் போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து புதுச்சேரி முத்தியால் பேட்டையைச் சேர்ந்த பென்னரசு(24), வினோத்(22), கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த அகமது உசேன்(21) ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களின குற்றச்செய்கையை தடுக்கும் வகையில் விழுப்புரம் எஸ்பி நாதா பரிந்துரையின் பேரில் ஆட்சியர் மோகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் பென்னரசு, வினோத், அகமது உசேன் ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார்.

கடலூர் மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் அதற்கான உத்தரவு நகலை போலீஸார் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x