Published : 28 Sep 2021 03:20 AM
Last Updated : 28 Sep 2021 03:20 AM

விவசாயிகளுக்கு ஆதரவாக - திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 5 மாவட்டங்களில் மறியல் :

விவசாய அமைப்புகளின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதர வாக திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட் டங்களில் சாலை மறியல் நடந்தது.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு திமுக தொழிற்சங்க மாநில தலைவர் பஷீர்அகமது தலைமை வகித்தார். பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 1,340 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

தேனி நேரு சிலை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் சூர்யா பாலமுருகன், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் 25 இடங்களில் நடந்த போராட்டத்தில் 1,752 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

விருதுநகரில் அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் விஜுகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி, எல்.பி.எப், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், 29 பெண்கள் உட்பட 313 பேரை கைது செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் தலைமையில், பழைய பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 66 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமையில் மறியல் நடந்தது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐஎன்டியுசி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 73 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 13 இடங்களில் நடந்த மறியலில் 646 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x