Published : 28 Sep 2021 03:21 AM
Last Updated : 28 Sep 2021 03:21 AM
உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் வீணாவதை தடுத்து, அதை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய முன் வர வேண்டும் என மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை, நீர்வளத் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்தார்.
தஞ்சாவூர் இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐஎப்பிடி)குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புதிய ஆராய்ச்சி கட்டமைப்பு வசதிகளை தொடங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் வரவேற்றார். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பேசியது: உணவுப் பதப்படுத்துதலுக்கு ஐஐஎப்பிடி நிறுவனம் மிகப்பெரிய அளவில் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. ஒரு வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் ஒரு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும்.
உணவு என்பது நம் அனைவருக்கும் மிக முக்கியமானது. அதை நமக்காகவும், நாட்டுக்காகவும் எந்த அளவுக்கு உற்பத்தி செய்கிறோம் என்பதில் தான் தேசிய வளர்ச்சி உள்ளது.
பிரதமர் மோடி உணவுப் பதப்படுத்தும் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதில், ஏற்படும் பிரச்சினைகளை கையாள அரசு தயாராக உள்ளது. தொழில்நுட்ப அளவில் மாற்றம் செய்தால், அதற்கான கட்டமைப்பை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வெளியிலிருந்து இறக்குமதி செய்வதை விட, நாமே உற்பத்தி செய்ய முன் வர வேண்டும். அதற்கு தேவையான மானியங்களையும் அரசு வழங்கி வருகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் வீணாவதை தடுத்து, மதிப்புக் கூட்டி, அதை ஏற்றுமதி செய்ய முன்வர வேண்டும். நமது உற்பத்தியையும், உற்பத்தி திறனையும் வளர்த்துக் கொண்டால் உலக அரங்கில் நம்நாட்டை திரும்பி பார்க்க வைக்க முடியும்.
உணவுப் பொருட்களை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றுவதற்கு அரசு பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இதனால் பெண்கள் இத்துறையில் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல், விலை நிர்ணயம் செய்தல் என எல்லாவற்றுக்கும் அரசு உரிய ஏற்பாடுகளை செய்து தருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT