Published : 28 Sep 2021 03:21 AM
Last Updated : 28 Sep 2021 03:21 AM

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் - கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தல் : வேடமணிந்து வந்து மேடை நடனக் கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கக் கோரி பிரபல நடிகர்கள் போல் வேடமணிந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மேடை நடனக் கலைஞர்கள். (அடுத்த படம்) குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரிய வைகுண்டம் தாலுகா சேரகுளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் கிராம மக்கள். (கடைசி படம்)பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி சமையலர் பணிக்கு தேர்வானவர்கள்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கக் கோரி மேடை நடனக் கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்து வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ் பண்பாட்டு மேடை நடனக்கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் சுஜா முருகன் தலைமையில் ரஜினி, சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் போல் வேடம் அணிந்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை அரசின் வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளுடன் நடத்தஅனுமதிக்க வேண்டும்.

ஆண்டு தோறும் அந்தந்தபகுதிகளில் மட்டும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் சிறு வருமானத்தில் பிழைத்துக் கொண்டிருக்கும் கலாச்சார பல்சுவை கலைஞர்கள் தசரா விழாவில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கலைஞர்கள் முழுமையாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கலை நிகழ்ச்சி நடத்தஅனுமதி அளித்தால், கலைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவ பாரத இந்து மக்கள் இயக்கநிறுவனர் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘தமிழக அரசு கரோனா குறைந்து இருப்பதாக கூறி பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், பூங்காக்களை திறந்துள்ளது. ஆனால், கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபட முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் வழிபாடு நடத்தவும், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

குடிநீர் பற்றாக்குறை

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகா சேரகுளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

எங்கள் ஊரில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறுஅமைத்து தண்ணீர் எடுத்து அதனை குடிநீர் குழாய் இணைப்பு மூலம் வீடுகளுக்கு வழங்கி வருகிறார்கள். தற்போது குடிநீர் பற்றாக்குறை உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. இந்த நிலையில் எங்கள் பகுதியில் இருந்து அருகில் உள்ள லட்சுமி நாராயணபுரம் கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல குழாய்கள் பதித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, குடிநீர் பற்றாக்குறையை நீக்கி சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’.

டாஸ்மாக் கடை

தூத்துக்குடி பிரையண்ட் நகர் மனிதநேய நற்பணி இயக்கத்தினர், பிரையண்ட் நகர் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பத்திரகாளி அம்மன் கோயில் நிர்வாகிகள் அளித்த மனு:

‘தூத்துக்குடி பிரையண்ட் நகர் 1-வது தெருவின் மையப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையின் அருகே மருத்துவமனை, பள்ளி, கோயில் போன்றவை உள்ளன. இதனால் அப்பகுதியில் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, மாணவ, மாணவிகள், பொதுமக்களின் நலன் கருதி பிரையண்ட் நகர் 1-வது தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’.

பணி நியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைக்காக காத்திருப்பவர்கள் அளித்த மனு:

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையில் இயங்கிவரும் விடுதியில் சமையலர் பணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேர்முகத்தேர்வு நடத்தி 44 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சென்னை பிற்படுத்தப்பட்டோர் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தனித்தனியாக பணி ஆணைகள் வந்தன.

தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரியிடம் கேட்டபோது தேர்தல் முடிந்ததும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என கூறினார். ஆனால், தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. எங்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’.

ஆர்டிஓ அலுவலகம்

காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் அளித்த மனுவில், ‘சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரம், நடுவக்குறிச்சி, நந்தகோபாலபுரம், புளியநகர், சிவத்தையாபுரம், பேய்க்குளம் ஆகிய ஊர்களில் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் உரிமம் பெறவும், புதுப்பித்தலுக்கும் நீண்ட காலமாக தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், சில ஆண்டுகளாக இப்பகுதிகள் திருச்செந்தூர்வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாயர்புரம் பகுதியை மீண்டும் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x