Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் 3,000 தல மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் முத்தூரில் உள்ள சோழீஸ்வரர் கோயில் மற்றும் சின்னமுத்தூர் செல்வக்குமாரசாமி கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அரசின் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்வுக்கு தாராபுரம் சார்-ஆட்சியர் ஆனந்த்மோகன் தலைமை வகித்தார். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தபின் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்துகோயில்களிலும் 3,000 தல மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது கோயில் திருப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முடி காணிக்கை கட்டணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. கோயில் பாதுகாப்புக்காக 10,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தூரம்பாடி குலமாணிக்கீஸ்வரர் கோயிலில் ரூ.85 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, முத்தூர் சோழீஸ்வரர் கோயிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தவும், கன்னிவாடி வஞ்சியம்மன் கோயிலில் ரூ.27 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோயில் மற்றும் கொங்கணகிரி கந்தபெருமான் கோயில் ஆகியவற்றில்நந்தவனம் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மணலூர் செல்லாண்டியம்மன் கோயிலில் திருப்பணிகள்செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் திருப்பூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர்கள் திலகவதி, பெரிய மருது பாண்டியன், தேவிப்பிரியா உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT