Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - தடுப்பூசி சிறப்பு முகாமை ஆட்சியர்கள் ஆய்வு :

தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் திவ்யதர்சினி ஆய்வு செய்தார்.

தருமபுரி / கிருஷ்ணகிரி / ஓசூர்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று நடந்த கரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் 379 முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தபப்ட்டது.

பி.எஸ்.அக்ரஹாரம், பி.அக்ரஹாரம், நாகதாசம்பட்டி, பென்னாகரம் முள்ளுவாடி, ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, பிக்கிலி உள்ளிட்ட முகாம்களை தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினி ஆய்வு செய்த பின்னர் கூறியதாவது:

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 871 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மறவாமல் 2-ம் தவணை ஊசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம், கரோனா 3-ம் அலை பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், பென்னாகரம் வட்டாட்சியர் பாலமுருகன், நல்லம்பள்ளி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், வடிவேல், பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயச்சந்திரபாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 601 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடந்தது. சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முகாமை ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி ஆய்வு செய்த பின்னர் கூறியதாவது:

சிறப்பு முகாம்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை மாற்ற அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கோவிந்தன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், வட்டார மருத்துவர் அலுவலர் மருத்துவர் வெண்ணிலா உள்ளிடோர் உடனிருந்தனர்.

ஓசூரில் ஆர்வம்

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜுஜுவாடி மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

இந்த முகாமை உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். கெலமங்கலம் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் சிஎஸ்ஆர் நிதி மூலமாக 1,200 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், ஓசூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் நடைபெற்றது.

மேலும் ஓசூர் அரசு மருத்துவமனை, மத்திகிரி, பாகலூர், கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x