Published : 25 Sep 2021 03:34 AM
Last Updated : 25 Sep 2021 03:34 AM
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கடந்த 10 மாதங்களில் ரூ.2580 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, என ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார்.
ஈரோடு ஈடிசியா அரங்கில், வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில், ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரத்து 500 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி முனையமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து விசைத்தறி மற்றும் கைத்தறி ஜவுளி ரகங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பதப்படுத்தப்பட்ட ஜவுளிகள், மஞ்சள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள், உணவு பொருட்கள், வேளாண்மை பொருட்கள், மோட்டார் வாகன பொருட்கள், முட்டை பொருட்கள், காகிதப் பொருட்கள் உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.
இது மட்டுமின்றி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து கடந்த 10 மாதங்களில் ரூ.2580 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய தொழில்முனைவோர்கள், தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் ஈரோடு மாவட்டத்தை ஏற்றுமதி முனையமாக மாற்ற வேண்டும், என்றார்.
தொடர்ந்து, 14 பயனாளிகளுக்கு ரூ.1.70 கோடி மானியம் உள்ளிட்ட ரூ.10.35 கோடி மதிப்பீட்டில் தொழில் நிதியுதவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஜெனரல் சுகன்யா கந்தசாமி, ஈரோடு மாவட்ட சிறு தொழில் கூட்டமைப்பு சங்க செயலாளர் பி.திருமூர்த்தி, துணை இயக்குநர் (நறுமண பொருட்கள் வாரியம்) கனகதிலீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT