Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டில் 12 இரும்பு உருக்கு ஆலைகளில் பழைய இரும்பு கழிவுகளுடன் சுமார் 10.5 டன் எடையுள்ள ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கி குண்டுகள் போன்ற வெடிப்பொருட்கள் கலந்திருந்தது தெரிய வந்தது.
அவற்றை கைப்பற்றிய போலீஸார், சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனகிடங்கில் பாதுகாப்பாக வைத்தனர். நெடுநாட்களாக இருந்த அந்த வெடிபொருட்களால், அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது.
ஆகவே, கடந்த மார்ச் மாதத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை செயலிழக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் விளைவாக சேமிப்பு கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களின் ஒரு பகுதி, பாதிரிவேடு அருகே சூரப்பூண்டி அடுத்த ராமசந்திரபுரம் கிராமத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வெடிக்கச் செய்து செயலிழக்கம் செய்யப்பட்டது.
அப்போது, நில அதிர்வு ஏற்பட்டதாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து, வெடி பொருட்களை செயலிழக்கம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மற்றொரு பகுதி வெடி பொருட்கள் மீண்டும் தனியார் நிறுவன கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்நிலையில், அந்த வெடி பொருட்களை, திருவள்ளூர் எஸ்பி வருண்குமாரின் முயற்சியால் ஆர்.கே.பேட்டைஅருகே பாலாபுரத்தை அடுத்த எஸ்.கே.வி. கண்டிகையில் செயல்படும் கல்குவாரியில் செயலிழக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
பின்னர் அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பகுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவருக்கும் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திலிருந்த தனியார் நிறுவன சேமிப்புக் கிடங்கில் இருந்த சுமார் 4 டன் எடையுள்ள, ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கி குண்டுகள் கடந்த 20-ம் தேதி நள்ளிரவு பாதுகாப்பாக எஸ்.கே.வி.கண்டிகைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அங்கு கல்குவாரியில், கடந்த 21, 22 ஆகிய தேதிகளில், சென்னை, திரிசூலம் ராணுவ கட்டுப்பாட்டு பகுதியை சேர்ந்த வெடிமருந்து செயலிழக்கம் செய்யும் நிபுணர்கள், அந்த வெடிபொருட்களை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் சிறிய அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக வெடித்து செயலிழக்கம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT