Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கூறினார்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் @தூய்மையான தூத்துக்குடி' திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ளமழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள், பாசன கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், கழிவுநீர்வடிகால்களை ஒரு வாரம் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேற்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்களின் கூட்டு துப்புரவு பணிகளைதொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வரின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கூட்டு துப்புரவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியில் சுமார் 700 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கழிவு நீர் கால்வாய்களை மட்டும் சுத்தம் செய்யாமல் தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கற்கள் போன்றவற்றை அகற்றும் பணிகளும் நடைபெறும்.
வரும் சனிக்கிழமை வரை நடைபெறும் இப்பணி மூலம் தூத்துக்குடியில் உள்ள அனைத்து கால்வாய்களும் சுத்தம் செய்யப்படும். மழைக் காலங்களில் தெருவோர சாலைகளில் மழை நீரை தேங்கவிடாமல், அதனை மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் சேகரிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
பல்வேறு இடங்களில் தற்காலிக மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்தமழை காலங்களின்போது 25 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டிருந்தது. தற்போது அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றும் வகையில் தொட்டிகள், மின் மோட்டார்கள், குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மழைநீர் வடிகால் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் மழைக்காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மாநகராட்சி ஆணையர் தி.சாரு முன்னிலை வகித்தார். மாநகர நல அலுவலர் வித்யா, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT