Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - 66 உள்ளாட்சி பதவிகளுக்கு : வேட்பு மனு தாக்கல் மந்தம் :

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் 11 ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 66 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

தி.மலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தில் 10-வது வார்டு, பெரணமல்லூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்தில் 11-வது வார்டு என 3 ஒன்றியக் குழு உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளது.

மேலும், அனக்காவூர் ஒன்றியம்கோட்டகரம், ஆரணி ஒன்றியம் அக்ராபாளையம், செங்கம் ஒன்றியம் இளங்குன்னி, கலசப்பாக்கம் ஒன்றியம் சேங்கபுத்தேரி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம், வேளானந்தல், போளூர் ஒன்றியம் பொத்தேரி, துரிஞ்சாபுரம் ஒன்றியம் கோவூர், பெரியகிளாம்பாடி சானானந்தல் மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் இருமரம் ஆகிய 11 ஊராட்சி மன்றத் தலைவர் பதவி இடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல், அனக்காவூர் ஒன்றியத்தில் 6 வார்டு உறுப்பினர்கள், செங்கம் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ஒரு வார்டுஉறுப்பினர், செய்யாறு ஒன்றியத்தில் 2 வார்டு உறுப்பினர்கள், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ஒரு வார்டு உறுப்பினர், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 4 வார்டு உறுப்பினர்கள், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள், போளூர் ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள், புதுப்பாளையம் ஒன்றியத்தில் 2 வார்டு உறுப்பினர்கள், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் ஒரு வார்டு உறுப்பினர், தெள்ளார் ஒன்றியத்தில் 8 வார்டு உறுப்பினர், தி.மலை ஒன்றியத்தில் 4 வார்டு உறுப்பினர், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் ஒரு வார்டு உறுப்பினர், வந்தவாசி ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 7 வார்டு உறுப்பினர்கள் மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 3 வார்டு உறுப்பினர்கள் என 52 வார்டு உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன.

தி.மலை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி உள்ளது. ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 3 நாட்களாக ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கான மனு தாக்கல் மந்தமாக உள்ளது. வார்டு உறுப்பினர் பதவிக்கு 25-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அடுத்த வாரம் வேட்பு மனு தாக்கல்சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வேட்பு மனு தாக்கல் வரும் 22-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 23-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வரும் 25-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினமே, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். 66 உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி காலை 8 தொடங்க உள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் இடமும், 11 ஊராட்சி மன்றத் தலைவர் இடமும், 52 வார்டு உறுப்பினர் இடமும் காலியாக உள்ளன. அதனை பூர்த்தி செய்ய அக்டோபர் 9-ம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக, தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை 04175 – 233616 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x