Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் முழுநேர அன்னதானத் திட்டத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கினார்.
திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் முழுநேர அன்னதான திட்டம் தொடக்க விழா சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மூன்று கோயில்களிலும் முழுநேர அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் அன்னதான மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் காணொலி காட்சி மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் க.செந்தில் ராஜ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், கோயில் இணை ஆணையர்(பொ) அன்புமணி ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பக்தர்கள் உணவுக்காக எங்கும் அலைய வேண்டாம் என்பதற்காக தமிழக முதல்வர் முழு நேர அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு எவ்வளவு பக்தர்கள் வருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT