Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 2022-ம் ஆண்டுக்கான வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.என்.தர் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மறுவரையறை செய்திடும் பொருட்டு 1,272 வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 337 வாக்குச்சாவடி மையங்களும், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்களும், சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 300 வாக்குச்சாவடி மையங்களும், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 330 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 1,272 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், வாக்குச்சாவடி மையங்கள் மறுவரையறை செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இம்மாதம் 20 முதல் 25-ம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். இதன் மூலம் 100 சதவீதம் முழுமையான மற்றும் சரியான வாக்குச்சாவடி மையங்கள் அமைத்திட உதவிட வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை நேற்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் வெளியிட்டார்.இப்பட்டியலில் செஞ்சி - 304, மயிலம் - 265, திண்டிவனம் (தனி) -264, வானூர் (தனி) - 277, விழுப்புரம் - 286, விக்கிரவாண்டி - 275, திருக்கோவிலூர் - 286 என சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 1957 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டத்தில், வாக்குச்சாவடி களின் அமைவிடம் குறித்து ஏதேனும் ஆட்சேபனை மற்றும் வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் வரும் 19-ம் தேதிக்குள் மாவட்டஆட்சியர் அல்லது திண்டிவனம் உதவி ஆட்சியர் , விழுப்புரம், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT