Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

என்எல்சியில் ஒலிம்பிக் நீச்சல் வீரர் கவுரவிப்பு :

ஒலிம்பிக் நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷை கவுரவிப்பதற்காக நெய்வேலியில் நடைபெற்ற விழாவில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராக்கேஷ்குமார் அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

கடலூர்

நெய்வேலியில் உலகத்தரத்திலான நீச்சல் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராக்கேஷ் குமார் தெரிவித்தார்.

நெய்வேலி பள்ளிகளில் பயின்று ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் பிரிவில் இந்தியாவின் சார்பில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சாஜன் பிரகாஷை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நெய்வேலி லிக்னைட் அரங்கில் நடைபெற்றது. இதில் சாஜன்பிரகாஷூக்கு ரூ .5 லட்சத்துக்கான காசோலையை என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராக்கேஷ் குமார் வழங்கினார்.

நெய்வேலியில் உள்ள நீச்சல் குளத்திற்கு, “ஒலிம்பிக் வீரர் சாஜன் பிரகாஷ் நீச்சல் குளம்” என பெயரிடப்பட்டுள்ளது.இதற்கான பெயர் பலகையை காணொலி மூலம் ராக்கேஷ்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக சாஜன் பிரகாஷை கௌரவிக்கும் வகையில் அவரது படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

விழாவில், என்எல்சி இந்தியா நிறுவனம் மேம்படுத்தவிருக்கும் விளையாட்டாக நீச்சல் அறிவிக்கப்படும். நீச்சல் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்க நெய்வேலியில் உலக தரத்திலான வசதிகள் அமைக்கப்படும் என என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராக்கேஷ்குமார் தெரிவித்தார்.விழாவில் என்எல்சி நிறுவன இயக்குநர்கள், கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் வி.ஜே. சாந்திமோளின் மகன் தான் சாஜன் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ரேவதி வீரமணி மற்றும் சி.ஏ. பவானிதேவி ஆகியோருக்கும் என்எல்சி நிறுவனம் சார்பில் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் இருக்கும் அவர்கள் பின்னர் இந்த ரொக்கப்பரிசினை பெற்றுக் கொள்ள உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x