Published : 13 Sep 2021 03:16 AM
Last Updated : 13 Sep 2021 03:16 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் - 1.34 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது : மீன்வளத்துறை கூடுதல் ஆணையர் மற்றும் ஆட்சியர்கள் நேரில் ஆய்வு

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அடுத்த படம்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா சிறப்பு முகாமில் ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். அப்போது, கண்காணிப்பு அலுவலர் சஜ்யன்சிங் ஆர்.சவான் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் உடனிருந்தனர்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1.34 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் பெருகி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி ‘மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்’ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் (கோவிஷீல்டு) நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்காக மொத்தம் 2,137 முகாம்கள் அமைக்கப்பட்டன. இம்முகாம் மூலம் மொத்தம் 2.20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் (நேற்று) கரோனா தடுப்பூசி செலுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, வேலூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் 630 மையங்களில் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் ஹக்கீம் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மீன்வளத்துறை கூடுதல் ஆணையரும், தடுப்பூசி முகாம் கண்காணிப்பு அலுவலருமான சஜ்யன்சிங் ஆர்.சவான் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதேபோல, ஆற்காடு அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முன்னிட்டு 3 மாவட்டங் களிலும் சுகாதாரப்பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர், வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது மட்டுமின்றி தன்னார்வலர்களும், தனியார் தொண்டு நிறுவனத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர் என பலர் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட வந்த பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றிரவு 7 மணி வரை 42 ஆயிரத்து 600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்கு நர் (ராணிப்பேட்டை) மணிமாறன் தெரிவித்தார்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் 522 மையங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. திருப்பத்தூர் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற முகாமை மீன்வளத்துறை கூடுதல் ஆணையர் சஜ்யன்சிங் ஆர்.சவான் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முகாமில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதனால், 200-க்கும் மேற்பட்ட முகாம்களில் பிற்பகல் 1 மணிக்கே தடுப்பூசி தீர்ந்ததால் அதன் பிறகு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். நேற்றிரவு 7 மணி நிலவரப்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் (திருப்பத்தூர்) செந்தில் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 971 இடங்களில் சிறப்பு முகாம் நேற்று நடத்தப் பட்டது. வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், அணைக்கட்டு, காட்பாடி மற்றும் பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

இதில் நேற்றிரவு 7 மணி நிலவரப்படி 51 ஆயிரத்து 273 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (வேலூர்) பானுமதி தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2.20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் போதிய இலக்கை அடைய முடியாவில்லை. நேற்று நடந்த சிறப்பு முகாமில் 1.34 லட்சம் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x