Published : 12 Sep 2021 03:21 AM
Last Updated : 12 Sep 2021 03:21 AM
திருவாரூர்/ நாகப்பட்டினம்/ தஞ்சாவூர்/ காரைக்கால்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலநாகையில், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தின புகழஞ்சலிக் கூட்டம், மன்னார்குடி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் செ.செல்வகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செ.அண்ணாதுரை, செயலாளர் ரா.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் ரா.காமராசு பேசியபோது, “பாரதியார் தலைமறைவு வாழ்க்கை நடத்தி, பல பாடல்கள் இயற்றிய மேலநாகையில், பாரதியாருக்கு நினைவு மணிமண்டத்தை தமிழக அரசு விரைந்து அமைத்துத் தர வேண்டும்” என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகாகவி பாரதியார் அறக்கட்டளை நிர்வாகி ரா.பூமிநாதன் செய்திருந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதியாரின் நினைவு தின நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக எடையூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை ரா.பிரியா பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் பாரதியாரின் படத்துக்கு நேற்று, மாலை அணிவித்து, புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, வட்டார கிளைத் தலைவர் கவிஞர் தங்க.குழந்தைவேலு தலைமை வகித்தார். நாகை மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், செயலாளர் தென்னடார் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் பாரத் கல்லூரி வளாகத்தில், மகாகவி பாரதியார் தேசிய பேரவை சார்பில், அதன் தலைவர் கோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதியார் சிலைக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சரவணன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் பூதலூர் மோகன்ராஜ், மூவர்கோட்டை தர், சூரக்கோட்டை விஜயகுமார், குருஜி ரமேஷ், பிரபு, ரெட்டிப்பாளையம் ரவிச்சந்திரன், சதா வெங்கட்ராமன், ஜெயராமன், முரளி, மைதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், துணை முதல்வர்(பொ) ஞானப்பிரகாசி தலைமையில், தலைமையாசிரியர் ஜெயசெல்வி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதியின் படத்துக்கு ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்சிசி அலுவலர் என்.காமராஜ் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT