Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் ( 12-ம் தேதி) 1,150 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
கேரள மாநிலத்தில் கரோனா தொற்று அதிக அளவு பரவி வரும் நிலையில், நம் மாவட்டத்தில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில் உள்ள 75 வார்டுகள், 8 பேரூராட்சிகள், 688 கிராம ஊராட்சிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் என 1,150 இடங்களில் நாளை மறுநாள் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளர்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்ற உள்ளனர். 1.15 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி போட 55 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் உள்ள மொத்தமக்கள் தொகையான 20,69,842பேரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சமாகும். இவர்களில் இதுவரை 6,61,017 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசு ஊழியர்களில் 94.76 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
செஞ்சி அருகே மகாதேவிமங்கலம் கிராமத்தில் தடுப்பூசிபோடப்பட்டதால் பெண் இறக்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தடுப்பூசியால் இதுவரை எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து எஸ்பி நாதா கூறியது:
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கக்கூடாது. சிலைகளை கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லக்கூடாது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அருகில் திட்ட அலுவலர் சங்கர், விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT