Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM

கீழ்பையூரில் 400 ஆண்டுகள் பழமையான சுடுமண் விநாயகர் சிலை : கிருஷ்ணகிரி காப்பாட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி

கீழ்பையூரில் 400 ஆண்டுகள் பழமையான சுடுமண் விநாயகர் சிலை உள்ளதாக, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்பையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோவிந்தசாமி என்பவர் வீட்டில் சுடுமண் விநாயகர் சிற்பம் இருப்பதைக் கண்டறிந்தனர். இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:

இந்த சுடுமண் விநாயகர் சிற்பமானது 400 ஆண்டுகள் பழமையானது. இரண்டு அங்குல உயரமே உள்ள இந்த விநாயகர், இரண்டு கைகளை மட்டுமே கொண்டுள்ளார். தலையின் உச்சியில் குடை செறுகுவதற்கான துளையும் உள்ளது. துதிக்கை வலம்புரியாக உள்ளது. குழந்தை போல் அமர்ந்துள்ளார். அடிப்பகுதி குழிவாக உள்ளது.

விநாயகர் சிற்பங்கள் பொதுவாக கல் அல்லது உலோகத்திலேயே அதிகம் காணப்படும். சுடுமண் சிற்பம் என்பது அரிதான ஒன்றாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. 400 ஆண்டுகள் பழமையான இந்த சுடுமண் விநாயகர் சிற்பம் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். விநாயகர் சிலையை தற்போது கோவிந்தராஜ் குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, வரலாற்றுக் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், ஆசிரியர் ரவி, தொல்லியல் ஆய்வாளர் சுகவனம் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x