Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 1,115 காவலர்கள் : பொது இடங்களில் சிலைகளை வைக்க தடை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பூஜை பொருட்களை வாங்க வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் நேற்று மாலை குவிந்த பொதுமக்கள். அடுத்த படம்: தி.மலை பேருந்து நிலையத்தில் நேற்று திரண்டிருந்த பயணிகள்.

திருவண்ணாமலை/வேலூர்

விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்படும் என இந்து முன்னணி யினர் என அறிவித்துள்ளனர். இதையடுத்து, தி.மலை மாவட்டத்தில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் தயாரித்த கூடங்கள் மற்றும் இருப்பு வைத் திருந்த சுமார் 32-க்கும் மேற்பட்ட கிடங்குகளுக்கு ‘சீல்’ வைக்கப் பட்டுள்ளன.

இதையும் மீறி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யாமல் தடுக்க காவல்துறையினரின் பாதுகாப்பு பணி பலப்படுத்தப் பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 11 துணை காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 1,115 காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல் துறையினருக்கு உதவியாக 250 ஊர்க்காவல் படையினரும் பங்கேற்றுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (இன்று) கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி 1,115 காவல் துறையினர் மற்றும் 250 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,365 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு உத்தரவுபடி, தி.மலை மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்யக்கூடாது. வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யலாம். பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், சிலை களை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலை களில் கரைக்க தனிநபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு பொருட் களை வாங்க வரும் பொதுமக்கள், கரோனா தடுப்பு வழிகாட்டி நெறி முறைகளை பின்பற்ற வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான அமைதிக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற் றனர்.

இந்த அமைதிக் கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதத்தில் மூன்றாம் அலை வரும் என்பதால் அதற்கு முன்பாகவே பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சமய விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் கொண்டாட தடையில்லை. வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலையை அருகில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் வைத்துவிட்டால் அவற்றை இந்து சமய அறநிலையத்துறையினர் முறைப் படி எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

அனுமதியில்லாமல் பொது இடங்களில் சிலைகளை வைத்தால் அல்லது ஊர்வலத்தில் ஈடுபட்டால் சட்டப்படி காவல் துறையினர் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்து முன்னணி தரப்பில் சிலைகள் வைப்பது குறித்து அவர்களின் கருத்துக்களை தெரிவித்தார்கள். ஆனால், அவற்றுக்கு எல்லாம் அனுமதி இல்லை என்று கூறி விட்டோம்’’ என தெரிவித்தனர்.

பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு பொதுமக்கள் சென்றதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் விடுமுறை என்பதால், வெளியூர்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு நேற்று திரும்பினர்.

இதேபோல், கிராமப் பகுதிகள் இருந்து, விநாயகர் சதுர்த்திக்கு பொருட்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் நகரப் பகுதிக்கு திரண்டனர். இதனால், தி.மலை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நேற்று காலையில் இருந்து கணிசமாக இருந்தன. பிற்பகல் 1 மணிக்கு பிறகு பயணிகளின் கூட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. சென்னை, பெங்களூரு, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தன. மாவட்டத்தில் உள்ள பிரதான பேருந்து நிலையங்களில் இருந்து சென்னைக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அண்டை மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும், சென்னைக்கு திருப்பி விடப் பட்டதால், பேருந்துக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பயணிகள் கூட்டத்தால், கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள் காற்றில் பறந்தன. பயணிகள் பலரும் முகக்கவசம் அணியவில்லை.

சாலை மறியல்

தி.மலையில் இருந்து சேத்துப்பட்டுக்கு நேற்று முன் தினம் இரவு பேருந்து இயக்கப் படவில்லை. இதனால், நள்ளிரவு வரை பயணிகள் காத்திருந்தனர். அதன்பிறகும் பேருந்து இயக்கப்படாததால், பேருந்து நிலையம் முன்பு பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களிடம் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு, மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சேத்துப்பட்டுக்கு பேருந்து இயக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x